search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கடத்தல் வழக்கு"

    விருகம்பாக்கத்தில் ரூ.20 லட்சம் கேட்டு தொழில் அதிபர் கடத்தல் சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    போரூர்:

    பெங்களூரைச் சேர்ந்தவர் அருண்குமார். கார் வாங்கி விற்பனை செய்யும் தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி பத்மாவதி. இவர்கள் இருவரும் சென்னை விருகம்பாக்கம் சஞ்சய்காந்தி நகரில் உள்ள உறவினர் வீட்டுக்கு வந்திருந்தனர்.

    இந்த நிலையில் வீட்டில் இருந்து வெளியே சென்ற அருண்குமார் திரும்பி வரவில்லை. இதுகுறித்து மனைவி பத்மாவதி விருகம்பாக்கம் போலீசில் புகார் அளித்தார்.

    நானும் எனது கணவர் அருண்குமாரும் 2நாட்களுக்கு முன்பு விருகம்பாக்கத்தில் உள்ள உறவினர் வீட்டிற்கு வந்தோம். நேற்று மாலை கணவர் அருண்குமார் வெளியே சென்றார். இதுவரை வீடு திரும்பவில்லை.

    இந்த நிலையில் கணவரின் நண்பரான சத்தியநாராயணா என்னை செல்போனில் தொடர்பு கொண்டு “உன் கணவர் எனக்கு 20 லட்சம் பணம் தரவேண்டும். அப்படி தரவில்லை என்றால் உன் கணவரை கொன்று விடுவேன் என்று மிரட்டல் விடுத்தார். எனவே எனது கணவரை மீட்டு தரவேண்டும்” என்று கூறியுள்ளார்.

    இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கடந்த 18 ஆண்டுகளாக நடைபெற்று வந்த கன்னட நடிகர் ராஜ்குமார் கடத்தல் வழக்கின் தீர்ப்பு வரும் 25-ம் தேதி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளதால், இது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. #Rajkumar #Veerappan
    கோபி:

    கன்னட நடிகர் ராஜ்குமார் கடந்த 30-07-2000ம் ஆண்டு ஈரோடு மாவட்ட வனப்பகுதி கர்நாடக மாநில எல்லையான தாளவாடி அருகேயுள்ள தொட்டகாஜனூரில் உள்ள அவரது பண்ணை வீட்டில் தங்கியிருந்தபோது வீரப்பன் மற்றும் அவனது கூட்டாளிகளால் துப்பாக்கி முனையில் கடத்திச் செல்லப்பட்டார்.

    108 நாட்கள் பிணைக்கைதியாக நடிகர் ராஜ்குமாரை வைத்திருந்த வீரப்பன் பின்னர் ராஜ்குமாரை விடுவித்தான்.

    இதுகுறித்து தாளவாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து கோபி 3-வது கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் வழக்கை தொடர்ந்தனர்.



    இந்த வழக்கில் தற்போது மாயாவி வீரப்பன், நடிகர் ராஜ்குமார் இறந்து விட்டனர் எனினும் வழக்கு தொடர்ந்து நடந்து வருகிறது.

    இந்த வழக்கு கடந்த 18 வருடம் 2 மாதங்களாக நடைபெற்று வருகிறது. கடந்த 7 வருடங்களுக்கு முன்பு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இவ்வழக்கை 10 நீதிபதிகள் விசாரித்து வந்தனர். இந்நிலையில், நேற்றும் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது இவ்வழக்கில் சம்பந்தப்பட்ட 9 பேரில் கோவிந்தராஜ், அன்றில், பசுவண்ணா, புட்டுச்சாமி, கல்மண்டிராமன் ஆகிய 5 பேர் நீதிபதி மணி முன்பு ஆஜரானார்கள். வழக்கை விசாரித்த நீதிபதி வருகிற 25-ம் தேதிக்கு வழக்கை ஒத்திவைத்தார். பின்னர். அன்றைய தினமே தீர்ப்பு வழங்கப்படும் என்றார். மேலும், அன்றைய தினம் வழக்கில் சம்பந்தப்பட்ட 9 பேரும் தவறாமல் ஆஜராக வேண்டும் எனவும் உத்தரவிட்டார்.

    இந்த வழக்கில் 47 பேர் சாட்சி அளித்துள்ளனர். கடந்த 18 ஆண்டுகளாக நடைபெற்று வந்த இந்த வழக்கின் தீர்ப்பு வரும் 25-ம் தேதி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளதால், இது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. #Rajkumar #Veerappan

    கோவை ஆர்.எஸ்.புரத்தை சேர்ந்த பூ வியாபாரியை ரூ.50 லட்சம் கேட்டு கடத்திய வழக்கில் மேலும் 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
    கோவை:

    கோவை ஆர்.எஸ்.புரத்தை சேர்ந்த பூ வியாபாரி விஷ்ணு ராஜ்(வயது 38) என்பவரை கடந்த மாதம் 30-ந் தேதி ஒரு கும்பல் காரில் கடத்தியது.

    பின்னர் அவரது தந்தை கோவிந்தராஜூக்கு போன் செய்து ரூ.50 லட்சம் கேட்டு மிரட்டினர். இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    இந்நிலையில் கடத்தல் கும்பல் விஷ்ணுராஜை திருச்சி-மதுரை பைபாஸ் சாலையில் தள்ளி விட்டு விட்டு தப்பிச் சென்றனர். போலீசார் திருச்சி சென்று விஷ்ணுராஜை மீட்டனர்.

    தொடர்ந்து நடந்த விசாரணையில் கோவை நல்லாம் பாளையத்தை சேர்ந்த தினகரன் (33), தடாகம் ரோட்டை சேர்ந்த பிரபு(28), சந்தோஷ் (22), உக்கடத்தை சேர்ந்த சதாம் உசேன் (23), ஆர்.எஸ்.புரத்தை சேர்ந்த ஹரி பிரசாத் (20), ராஜவீதியை சேர்ந்த அரவிந்த்(23), இடையர் வீதியை சேர்ந்த நாகராஜ்(26) ஆகிய 7 பேரை கைது செய்தனர்.

    இந்த வழக்கில் மேலும் சிலரை போலீசார் தேடி வந்தனர். இந்நிலையில் திருச்சியை சேர்ந்த மணிகண்டன், மதுரையை சேர்ந்த சூரிய பிரபு, ராஜேஷ் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். #tamilnews
    சென்னையில் கடத்தல் வழக்கில் சம்பந்தப்பட்ட குழந்தையின் பெற்றோர் யார்? என்பதை கண்டறிவதற்காக கைது செய்யப்பட்ட தம்பதிக்கும், குழந்தைக்கும் நேற்று டி.என்.ஏ. பரிசோதனை செய்யப்பட்டது.
    சென்னை:

    சென்னை சேத்துப்பட்டை சேர்ந்தவர் சோமன். ஓய்வுபெற்ற போலீஸ் அதிகாரியான இவரது மகன் யோகேஷ்குமாருக்கும், பத்மினி என்ற இளம் பெண்ணுக்கும் கடந்த 2016-ம் ஆண்டு திருமணம் நடந்தது. பத்மினி தான் கர்ப்பமானதாகவும், பெண் குழந்தையை பெற்றது போலவும் ஒரு குழந்தையோடு கணவன் வீட்டிற்கு வந்தார்.

    போலீஸ் அதிகாரி சோமனுக்கு இதில் சந்தேகம் ஏற்பட்டு மருமகள் பத்மினி கர்ப்பமானது போல அடிக்கடி சிகிச்சை பெற்று வந்த ஆஸ்பத்திரியில் விசாரித்தார். அப்போது பத்மினி கர்ப்பமாகவில்லை என்பது தெரியவந்தது. இதனால் குழந்தை பெற்றதாக பத்மினி கூறியது பொய்யாக இருக்கலாம் என்று கருதி தனது மகன் யோகேஷ்குமார் மூலம் பத்மினி மீது எழும்பூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

    அதன்பேரில் எழும்பூர் அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். விசாரணையில், பத்மினி தான் குழந்தையை பெற்றெடுக்கவில்லை என்றும், வட மாநிலத்தை சேர்ந்த தம்பதி ஒருவரிடம் அந்த பெண் குழந்தையை தத்தெடுத்ததாகவும் தெரிவித்தார். தன்மீது வழக்குபதிவு செய்யப்பட்டதால், அதில் கைதாகாமல் இருக்க பத்மினி கோர்ட்டில் முன் ஜாமீன் பெற்றுக்கொண்டார்.

    பின்னர் கோர்ட்டு உத்தரவின் பேரில், இந்த வழக்கை சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் செயல்படும் குழந்தை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் விசாரித்தனர். துணை கமிஷனர் மல்லிகா, கூடுதல் துணை கமிஷனர் சியாமளாதேவி ஆகியோர் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் ரஞ்சித் விசாரணை நடத்தினார். போலீசார் நடத்திய விசாரணையில் பத்மினி வைத்திருந்த பெண் குழந்தை கடத்தல் குழந்தை என்று கண்டறியப்பட்டது. உத்தரபிரதேச மாநிலம் காசியாபாத்தை சேர்ந்த குழந்தை கடத்தல் கும்பலிடம் இருந்து ரூ.2 லட்சம் விலைகொடுத்து குழந்தையை பத்மினி வாங்கியதாகவும் தெரிகிறது.

    கடத்தல் கும்பலைச் சேர்ந்த ரிக்கி வர்மா (வயது 40), அவரது மனைவி கோமல் வர்மா (35), அஜய்சர்மா (40), அவரது மனைவி ஜெயா சர்மா (35) ஆகியோர் கடந்த 7-ந் தேதி அன்று கைது செய்யப்பட்டனர். அவர்கள் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு, நீதிமன்ற காவலில் புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

    இந்த நிலையில் இந்த வழக்கில் புதிய பிரச்சினை ஒன்று எழுந்தது. சம்பந்தப்பட்ட குழந்தையை அஜய்சர்மா, ஜெயாசர்மா ஆகியோரிடமிருந்து தத்தெடுத்ததாக பத்மினி போலீசார் விசாரணையில் தெரிவித்திருந்தார். அதுதொடர்பான சான்றிதழ்களையும் பத்மினி போலீசாரிடம் கொடுத்திருந்தார். எனவே சம்பந்தப்பட்ட குழந்தை கடத்தல் குழந்தையா? அல்லது அஜய்சர்மா, ஜெயாசர்மா தம்பதியின் குழந்தையா? என்பதை டி.என்.ஏ. பரிசோதனை மூலம் கண்டறிய போலீசார் முடிவு செய்தனர்.

    இதனால் டி.என்.ஏ. பரிசோதனை செய்ய போலீசார் கோர்ட்டு அனுமதி பெற்றனர். நேற்று புழல் சிறையில் இருந்து அஜய்சர்மாவும், அவரது மனைவி ஜெயாசர்மாவும் சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள கஸ்தூரிபாய் அரசு மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டனர். அவர்களுக்கு டி.என்.ஏ. பரிசோதனை நடந்தது.

    சம்பந்தப்பட்ட குழந்தையும் ஆஸ்பத்திரிக்கு கொண்டுவரப்பட்டு டி.என்.ஏ. பரிசோதனை செய்யப்பட்டது. டி.என்.ஏ பரிசோதனை முடிவு வந்த பிறகு தான் இந்த வழக்கில் மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவர வாய்ப்புள்ளது.

    ×